புறஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து நமது முகத்தை பாதுகாக்க ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இது குறித்த விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியமா?
நமது சருமத்தை பாதுகாக்க தினசரி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தியா போன்ற வெப்பமயமான நாட்டில் சூரியனில் இருந்து வரும் புறஊதாக்கதிர்கள் நமது முகத்தை அதிகமாக தாக்கும். இதனால் சருமம் கருத்துப் போவது, வயதுக்கு முந்தைய முதுமை, சருமச் சுருக்கங்கள் போன்றவை ஏற்படும்.
எனவே புறஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து நமது முகத்தை பாதுகாக்க ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இவை சூரியனின் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொண்டு, அது சருமத்தின் ஆழத்தில் உள்ள லேயர்கள் வரை ஊடுருவுவதைத் தடுக்கிறது அல்லது அந்தக் கதிர்களின் தாக்கம் சருமத்தை பாதிக்காமல் காக்கிறது.
கிரீம், லோஷன், ஜெல், ஸ்டிக், ஸ்பிரே என பல வடிவங்களில் சன் ஸ்கிரீன் கடைகளில் கிடைக்கிறது. நமது சருமத்தின் டைப்பை பொறுத்து சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு ஆயில் சருமம் என்றால், ஜெல் வடிவிலான சன் ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் அல்லது லோஷனை பயன்படுத்தலாம்.
நாம் வெளியே செல்வதற்கு 20 அல்லது 30 நிமிடங்களுக்கு முன்பு சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு பதிலாக, நாம் வெயிலில் சென்ற 15, 20 நிமிடங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக சன் ஸ்கிரீன் போட்டுக்கொண்டாலே போதுமானது.
எல்லா சன் ஸ்கிரீன்களிலும் எஸ்.பி.எஃப் (SPF – Sun Protection Factor) என ஒரு எண் குறிப்பிட்டிருக்கும். இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? குறிப்பிட்ட அந்த சன் ஸ்கிரீனுக்கு எந்தளவுக்கு சூரியனின் பாதிப்புள்ள கதிர்களின் வீரியத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதற்கான குறியீடுதான் அது. வெயிலை உங்களால் 10 நிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது என்றால், எஸ்.பி.எஃப். 15 உள்ள சன் ஸ்கிரீன் உங்களுக்கு 150 நிமிடங்களுக்கு பாதுகாப்பு தரும். அதாவது, 10X15. இது தோராயமான ஒரு கணக்குதான். நீங்கள் வெயிலில் செலவிடப் போகிற நேரத்தைப் பொறுத்து அதிக அளவு எஸ்.பி.எஃப். உள்ள சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
எஸ்.பி.எஃப். 75, 100 என்றெல்லாம் கிடைக்கிற சன் ஸ்கிரீன் சருமத்துக்கு அதிகபட்ச பாதுகாப்பைக் கொடுக்கும் என்று நம்பி சிலர் பயன்படுத்துகிறார்கள். அதிகபட்சம் நம்ம ஊருக்கு எஸ்.பி.எஃப். 50 என்பதே போதுமானது. அதற்கு மேல் இருப்பது தேவையில்லை. எஸ்.பி.எஃப். 15 உள்ள சன் ஸ்கிரீன் எல்லாருக்கும் ஏற்றது. அதை வெயில் நேரடியாகப் படுகிற எல்லா பகுதிகளிலும் தடவிக் கொள்ள வேண்டும். சன் ஸ்கிரீனை கண்களில் படாமல் உபயோகிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சன் ஸ்கிரீன் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.