கோடைக்காலத்தில் பெண்களின் தலை முடி முதல் பாதம் வரையிலான அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் சோற்றுக்கற்றாழை ரொம்பவே உதவும்” என்கிறார் அழகுக்கலை நிபுணரும் அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அசோக். “தலைமுடி மற்றும் சருமத்தின் ஈரப்பதத்தைக் காக்க, இயற்கை கொடுத்திருக்கும் அற்புதமான பொருள் சோற்றுக்கற்றாழை. அதை முறையாகப் பயன்படுத்தினால் ஏராளமான பலன்களைப் பெற முடியும். அதற்கு முன், சோற்றுக்கற்றாழை பற்றி அடிப்படையான ஒரு விஷயத்தைப் பார்த்துவிடுவோம்.
சோற்றுக்கற்றாழையை எந்தத் தேவைக்குப் பயன்படுத்தினாலும், அதன் தோல் நீக்கி, சுமார் பத்து முறையாவது நீரில் அலசுவது அவசியம், ஏனென்றால், சோற்றுக்கற்றாழையின் தோல் நீக்கிய பின், அதில் இருக்கும் மஞ்சள் நிற திரவம் நம் உடலுக்கு ஏற்றதல்ல
எனவே, அது போகும்வரை அலசிய பிறகே பயன்படுத்த வேண்டும். மேலும், அதனுடன் ஏதேனும் ஒன்றைச் சேர்த்த பின்பே உடலின் பாங்களில் பயன்படுத்த வேண்டும்.
தலைமுடி: தலை முடிக்கு அதிக வெப்பம் அதிகக் குளிர்ச்சி இவை இரண்டுமே ஏற்றதல்ல. வெப்பம் அதிகமாகும்போது சுரக்கும் அதிகப்படியான வியர்வை காரணமாகத் தலை ஒரு பிசுபிசுப்பாக இருக்கும். அப்படி இருப்பவர்கள் செய்துகொள்ள ஒரு குறிப்பு. சோற்றுக்கற்றாழையைத் தோல் நீக்கி, கழுவிய பின்னர் அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அரைக் கப் தயிர், மூன்று ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, தலையில் தேய்க்கவும். அரை மணி நேரம் ஊற வைத்த பிறகு, ஷாம்பு போட்டு குளிக்கவும். இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யும்போது தலைமுடி பிசுபிசுப்புக்குத் தீர்வாக அமையும்.
உடல் வெப்பம்: உடலில் ஏற்படும் வெப்பம் அதிகரிக்க, உடலிலும் தலையிலும் சூட்டுக்கொப்பளங்கள் வரும். குழந்தைகளுக்கு இந்தக் கொப்பளங்கள் வரும். இதற்கு, சோற்றுக்கற்றாழை விழுதுடன் அரைக் கப் தயிர் மற்றும் 30 மி.லி விளக்கெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து ஷாம்பு போட்டு குளிக்கவும். இப்படிச் செய்யும்போது உடல் சூடு தணிந்து, குளிர்ச்சியாகும்.
சருமம்: சோற்றுக்கற்றாழையைத் தோல் நீக்கி நீரில் கழுவி அரைத்துக்கொள்ளவும். அதனுடன் சோளமாவு அரை ஸ்பூன் மற்றும் அரிசிமாவு அரை ஸ்பூன் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். அதில், ரோஸ் ஆயில் பத்துச் சொட்டுகள் சேர்க்கவும். அதை முகம், கை, கழுத்து ஆகிய இடங்களில் தடவினால், வெயிலினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் சருமங்களில் ஏற்படும் கருமை நீங்கி புத்துணர்வை அளிக்கும்.
தோல்: தோல் வறட்சியைப் போக்க, *சோற்றுக்கற்றாழை விழுதுடன் 10 மி.லி நல்லெண்ணைய் மற்றும் செண்பகப் பூ எண்ணெய் 20-30 சொட்டுகள் சேர்க்கவும். மேலும், அதனுடன் 5 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். கைகள், கால்கள், கழுத்து, முதுகில் தடவி ஒருமணி நேரம் கழித்துக் குளிக்கவும். இதனால், உடலில் ஏற்படும் வறட்சி மற்றும் சொரசொரப்பான தோற்றம் மாறி மிருதுவான தோற்றத்தைப் பெறலாம்.
பாதம்: கால் மற்றும் பாதங்களில் பாதுகாப்புக்கு, சோற்றுக்கற்றாழை விழுதுடன், ஒரு ஸ்பூன் வெண்ணெய், பத்து மி.லி கிளிசரின் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதைக் கால் மற்றும் பாதங்களில் பூசிக்கொண்டு, சாக்ஸ் அணிந்துகொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து, சாக்ஸை அகற்றிவிட்டு, கழுவவும். இது கால் மற்றும் பாதங்களை மிருதுவாகி விடும்.
அழகையும் ஆரோக்கியத்தையும் இணைந்து தரும் குணம் கொண்டது சோற்றுக்கற்றாழை. இதை அனைவருமே பயன்படுத்தலாம். எவ்வித பக்க விளைவுகளும் இதில் இல்லை.
– VIKADAN