தென்னிந்திய ரசங்களில் தமிழ்நாடு, ஆந்திராவை அடுத்து, கேரளா ஸ்டைல் ரசம் சுவையாகவும், காரமாகவும் இருக்கும். அதிலும் கேரளா ஸ்டைல் ரசத்தின் செய்முறை எளிமையாகவும், சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.
இங்கு கேரளா ஸ்டைல் தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தக்காளி – 2 தண்ணீர் – 1 மற்றும் 1/2 கப் வேக வைத்த துவரம் பருப்பு – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு…
மல்லி – 1 1/2 டீஸ்பூன் மிளகு – 1/2 டீஸ்பூன் இஞ்சி – 1/2 இன்ச் பூண்டு – 3 பற்கள் சீரகம் – 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது
செய்முறை: முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு நல்ல மணம் வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியை வெட்டி, ஒரு வாணலியில் போட்டு லேசாக பிசைந்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். தக்காளியானது நன்கு வெந்தது பச்சை வாசனை முற்றிலும் போனதும், அதில் பெருங்காயத் தூள் சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு, பின் புளிச்சாறு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, 5-7 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் துவரம் பருப்பு சேர்க்க வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, ரசத்துடன் சேர்த்து இரண்டு அடுப்பையும் அணைத்து, கொத்தமல்லியைத் தூவினால், கேரளா ஸ்டைல் தக்காளி ரசம் ரெடி!!!