உங்களுக்கு கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு எப்படி செய்வதென்று தெரியுமா? இது பண்டிகை நாட்களில் வீட்டில் செய்வதற்கு ஏற்ற ஓர் அற்புதமான மற்றும் எளிமையான ஓர் சைவ குழம்பு. இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பின் எளிய செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 1/2 கப் சின்ன வெங்காயம் – 5 (நறுக்கியது) மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவி நெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு… துருவிய தேங்காய் – 1/4 கப் பச்சை மிளகாய் – 1 சீரகம் – 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு… தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது வரமிளகாய் – 1
செய்முறை: முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து குக்கரில் போட்டு, சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து 2-3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியில் மசித்த பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து பச்சை வாசனை போனதும், மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் குழம்புடன் சேர்த்து, அதில் ஊற்றி கிளறினால், கேரளா பருப்பு குழம்பு ரெடி!!!