6 மாதங்களாக எனது இளைய மகன் என்னென்ன சித்ரவதை அனுபவித்தானோ என செஞ்சியில் குழந்தையை மனைவி தாக்கிய வீடியோ குறித்து அவரது தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மணலப்பாடி மதுர கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவர் ஆந்திர மாநிலம் ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி (23) என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கோகுல் (4), பிரதீப் (2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்த நிலையில் ஊரடங்கால் வேலை இல்லாததால் மோட்டூருக்கே திரும்பினர். இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் அவரை சித்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு வடிவழகன் அனுப்பிவிட்டார்.
அப்போது அவர் பயன்படுத்திய செல்போனை பார்த்த வடிவழகனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் இளைய மகன் பிரதீப்பை கடுமையாக தாக்கியுள்ளார். குழந்தை அழுவதை கண்டால் மனம் பதைபதைக்கிறது. புகாரின் பேரில் துளசியை போலீஸார் கைது செய்தனர். அந்த அளவுக்கு ஒரு கொடுமைச் செயலை இந்த பெண் ஏன் செய்தார் என்பது அதை விட கொடுமையாக உள்ளது.
துளசி சென்னையில் இருந்த போது அவருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் வடிவழகனுக்கு தெரியாமல் பழகி வந்துள்ளனர். வடிவழகன் குடும்பத்தினருடன் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு சென்ற போதும் துளசி – மணிகண்டனின் கள்ளக்காதல் போனில் தொடர்ந்துள்ளது.
இதையடுத்து துளசி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மணிகண்டனும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் 2ஆவது குழந்தை வடிவழகன் போல் இருப்பதாக மணிகண்டன் துளசியிடம் கூறியதால் அந்த குழந்தையை மட்டும் துளசி கடுமையாக தாக்கி அதை வீடியோவாக எடுத்து மணிகண்டனுக்கு அனுப்பி அவரை சந்தோஷப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வடிவழகன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், நான் காலையில் வேலைக்கு சென்றால் மாலையில்தான் வீடு திரும்புவேன். ஒரு நாள் காலை வேலைக்கு செல்லும் போது நன்றாக விளையாடிக் கொண்டிருந்த எனது இளைய மகன் மாலை வந்த போது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தான். அவனது இருகால்களிலும் ரத்த வீக்கம் இருந்தது. இதுகுறித்து துளசியிடம் கேட்ட போது கால் தவறி கீழே விழுந்துவிட்டான் என கூறினார்.
அவனுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்ததால் நானும் அதை நம்பிவிட்டேன். பிறகு 1 வாரம் மருத்துவமனையில் அனுமதித்து பிறகு வீட்டுக்கு அழைத்து வந்தேன். அதன் பிறகும் தொடர்ந்து அந்த குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தன. எப்போது கேட்டாலும் விழுந்துவிட்டான், இடித்துக் கொண்டான் என கூறுவார் துளசி. மேலும் நான் இருக்கும் போது அந்த குழந்தையின் காயத்திற்கு மருந்து போடுவது உள்ளிட்ட செயல்களை செய்வார். இதனால் எனக்கு சந்தேகமும் வரவில்லை.
ஆனால் அவரது போனில் இருந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி ஆகிவிட்டேன். துளசி அடிக்கிற வேகத்தையும் என் மகன் துடிக்கிறதையும் பார்த்து நான் துடித்துவிட்டேன். 6 மாதம் என் பிள்ளை என்னென்ன சித்ரவதையெல்லாம் அனுபவிச்சானோ, ஆனால் துளசிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். இது மற்றவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.