கத்வால் சேலைகளின் ஒவ்வொரு இழைநூலும் முற்றிலும் கையால் நெய்யப்படுகிறது என்பதே இதன் சிறப்பம்சம்.
கண்ணை பறிக்கும் கத்வால் பட்டு சேலைகள்
தெலுங்கானா மாநிலத்தில் துங்கபத்ரா மற்றும் கிருஷ்ணா நதிகளுக்கு இடையே உள்ள ஊர்தான் கத்வால். அழகிய பட்டு சேலைகளை உற்பத்தி செய்து தரும் இந்த ஊரின் பெயரிலேயே உலக புகழ்பெற்ற கத்வால் சேலைகள் விற்பனைக்கு வருகின்றன. கத்வால் சேலைகள் என்பதில் கத்வால் பட்டு சேலைகள், காட்டன் சேலைகள் என்ற இருவகைகள் உள்ளன.
கத்வால் சேலைகளின் ஒவ்வொரு இழைநூலும் முற்றிலும் கையால் நெய்யப்படுகிறது என்பதே இதன் சிறப்பம்சம். இன்றளவும் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அதிக வரவேற்பை பெற்றுள்ள இந்த கத்வால் சேலைகள் புவிசார் குறியீடு பெற்ற சிறப்பு சேலைகளாக விளங்குகின்றன.
கத்வால் சேலையின் சிறப்பம்சம்:-
கத்வால் ஊரில் நெய்யப்படும் கைத்தறி சேலைகள் பெரும்பாலும் பருத்தி நூலிழை சேலையின் அதன் பார்டன் மற்றும் புட்டா பகுதிகளில் சுத்தமான தங்க சரிகையில் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும். பாரம்பரிய முறையில் உள்இணைப்பு மற்றும் ஊடுமுறையில் நெய்யப்பட்ட இந்த சேலைகளின் தொழில்நுட்பத்தை குப்படம் என்று கூறுகிறார்கள்.
பார்டர் பகுதியை கும்பம் என்று கூறுவதால் இச்சேலைகள் கும்ப சேலைகள் (அ) கொட்டகொம்மா சேலைகள் என்று கூறுவர். இதனை நெய்பவர்கள் இந்த தேவன், தேவியருக்கு ஆடை நெய்து தந்த ஜீவஈஸ்வர் மகாராஜாவின் வழிதோன்றல்கள் எனவும் கூறப்படுகிறது.
தீப்பெட்டிக்குள் அடங்கி விடும் கத்வால் சேலைகள்:-
தெலுங்கானாவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள கத்வால் பகுதியில் உருவாகும் இச்சேலைகளுக்கான பட்டுநூல் பெங்களூருவில் இருந்தும், ஜரிகை சூரத்தில் இருந்தும் தருவிக்கப்படுகின்றன. பருத்தியிலான உடல்பகுதியும், உயர்தரமான பட்டு முந்தானை பகுதியைக் கொண்டது. பெரும்பாலான பட்டு சேலையை போன்று மாறுபட்ட வண்ணத்தில் கண்ணை கவரும் பட்டுசேலை.
இதனை “சிகோ சேலைகள்” (Sico Sarees) என்றும் அழைப்பர். கத்வால் சேலையின் வியப்பூட்டும் அம்சம் எதுவென்றால் ஒரு குறிப்பிட்ட வகை மடிப்பின் மூலம் மடிக்கப்படும்போது இந்த சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் அடைத்து விடலாம். எனவே இந்த கத்வால் சேலை என்து மிகவும் எடை குறைந்தது மட்டுமல்ல அணிய எளிமையான சேலை.
அனைத்து நிறங்களிலும் கிடைக்கும் கத்வால் சேலைகள்:-
இருபுற பார்டர் உள்ள மென்மையான மற்றும் அடர்த்தியான பல நிறங்களில் கத்வால் சேலைகள் கிடைக்கின்றன. இதன் ஒரு பார்டரிலேயே மூன்று டிசைன் உள்ளவாறும் கிடைக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட டிசைன் பார்டர் உள்ளவாறே இச்சேலைகள் கிடைக்கின்றன. பார்டர்களில் டிசைன் ஏதுமின்றி பிளைனாக பளபளப்புடன் திகழ்கின்றன. பருத்தி மற்றும் பட்டு நூலுடன் கூடிய இந்த சேலைகள் சிறப்பான ஜரிகை வேலைப்பாடு கொண்ட பார்டர்கள் மூலமே தனித்து விளங்குகின்றன.
இன்றைய நாளில் புதிய வரவாய் சிறுகட்டம் போன்ற உடல்பகுதியும், பிளைன் சரிகையும் உள்ளவாறு கத்வால் பட்டு சேலைகள் வருகின்றன. இதன் சிறப்பான கைத்தறி வேலைப்பாட்டிற்கு ஏற்ப விலையும் சற்று அதிகமாகவே உள்ளது. நவநாகரீகம் யுவதிகள் அணிய ஏற்றவாறு நவீன டிசைன், மென்மை, எடைகுறைந்த சேலை என்பதில் கத்வால் அனைவருக்கும் பிடித்தமாக உள்ளது.