தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்து தொங்குகிறது இந்த பாசிச ஆட்சி. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான இந்த வைரசை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். அவர்களைத் தனிமைப் படுத்தி இருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாத்திருக்க முடியும் என மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”கொரோனா வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மூலம்தான் பரவியிருக்கிறது.
அப்படியானால் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை 14 நாட்கள் நீங்கள் பாத்து காத்திருந்து, அதற்கு பிறகு அவர்களை வெளியில் விட்டிருந்தால் 130 கோடி பேர் வீட்டில் நாங்கள் அடைபட்டு இருக்க மாட்டோம். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் எத்தனை பேர் இருப்பான்? 10 லட்சம் பேர் அல்லது 20 லட்சம் பேர் இருப்பானா? வெளிநாட்டில் பரவி விட்டது.
அப்போது நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அனைவரையும் இங்கு வைத்து பாதுகாப்பதற்கான செட்டப் நம்மிடம் கிடையாது. அதற்கான மருத்துவ கட்டமைப்பு, காவல்துறை கட்டமைப்பு நம்மிடம் இல்லை. திருடனை பிடிப்பார்கள். அதே நேரத்தில் ஒருவன் நோயாளியாக இருக்கிறானா? அவனது வீட்டை பாதுகாப்பது காவல் துறையின் வேலை கிடையாது. அப்படியானால் நீங்கள் என்ன செய்து இருக்க வேண்டும்?
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி பதினான்கு நாட்கள் கழித்து விட்டிருந்தால் நாங்கள் 130 கோடி பேர் சிறையில் இருப்பதைப்போல் வீட்டில் இருக்க மாட்டோம்.
என்ன செய்து விட்டீர்கள்? இந்த 130 கோடி பேரையும் நோயாளிகளாக காட்டி விட்டீர்கள். பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பிரச்சினை ஆகி விட்டதல்லவா? அவர் ஜனாதிபதி வரை போய் பார்த்தார் என்று கூறப்பட்டது அல்லவா? அது எப்படி சாத்தியமாயிற்று? அந்த பாடகி போய் ஜனாதிபதியை பார்த்தபின்பு ஜனாதிபதிக்கு கொரோனா நோய் வந்திருந்தால் நிலைமை என்ன? நாட்டோட ஆபத்தைப் பற்றி நாம் கவலைப்படுகிறோம். ஆளும் வர்க்கம், பணக்காரர்களை சங்கடப்படுத்த விடக்கூடாது என நினைத்து எங்களை எல்லாம் வீட்டுக்குள் முடக்கி வைத்து வேலை வாய்ப்பின்றி தவிக்க விட்டு விட்டீர்கள்.
ஒட்டுமொத்த தேசத்துக்குமான கடையடைப்பு ஊரடங்கு உத்தரவு என எந்த நாட்டிலும் கொண்டுவரப்படவில்லை. தயவு செய்து அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்