நமது உடலிலேயே கழுத்துப் பகுதியில் உள்ள சருமத்தில் கொலாஜன் அளவு குறைவு மற்றும் அப்பகுதியில் எண்ணெய் சுரப்பிகளும் குறைவு. அதனால் தான் முகத்தை விட கழுத்துப் பகுதியில் சுருக்கங்கள், சரும கருமை, வறட்சி மற்றும் கருமையான திட்டுக்கள் போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடுகிறது. அழகு என்று வரும் போது முகத்தை தவிர, கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கழுத்துப் பகுதியில் சேரும் அழுக்குகளை அவ்வப்போது நீக்காமல் விட்டுவிட்டால், அது அப்பகுதியில் கருமையான கறைகளாக படிந்து, கழுத்தின் அழகையே கெடுத்துவிடும்.
கழுத்துப் பகுதியில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளை தினமும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், கருமையாக இருக்கும் கழுத்து விரைவில் பளிச்சென்று சுத்தமாகவும், வெள்ளையாகவும் மாறும். இப்போது கழுத்துப் பகுதியில் உள்ள கருமையைப் போக்கும் சக்தி வாய்ந்த இயற்கை வழிகள் என்னவென்பதைக் காண்போம்.
பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர்
பேக்கிங் சோடாவில் சிறிது நீர் சேர்த்து கலந்து, அதை கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுத்துப் பகுதியை தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், கழுத்து நன்கு சுத்தமாகவும், விரைவில் வெள்ளையாகவும் மாறும்.
அரிசி மாவு மற்றும் பால்
ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவை பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.
தக்காளி கூழ்
தக்காளியை துண்டுகளாக்கி, அரைத்து, அந்த கூழை கழுத்துப் பகுதியைச் சுற்றி தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் பத்து நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, கழுத்து அழுக்கின்றி இருக்கும்.
எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள்
ஒரு சிறு பௌலில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கழுத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து விட்டு, பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுத்தைக் கழுவ வேண்டும். இப்ப வாரத்திற்கு 2-3 முறை செய்து வர கழுத்து சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்.
பேக்கிங் சோடா மற்றும் கற்றாழை
பேக்கிங் சோடா மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை கழுத்து பகுதியில் தடவி மென்மையாக சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுத்தைக் கழுவ வேண்டும். இப்படி 2-3 நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், கழுத்து சுத்தமாக அழுக்கின்றி இருக்கும்.