பெண்கள் கூந்தலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஆர்வம் காட்டுவது புருவங்களின் மீதுதான்.இதற்கு டீன் ஏஜ். மிடில் ஏஜ். ஓல்டு ஏஜ். என்று எந்த வயதும் விதிவிலக்கல்ல! டீன் ஏஜ் காலத்தில், ஹார்மோன் மாற்றம் காரணமாக புருவங்களில் புசு புசுவென காடுபோல் முடி வளர்வது இயற்கையே.
ஆனால், அழகாக இல்லையே’ என்று அதன் மீது கை வைக்க ஆரம்பித்து விடுகிறோம். அந்த வகையில், புருவங்களை த்ரெட்டிங் செய்யும் போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் – குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள். த்ரெட்டிங் என்பதை செய்ய ஆரம்பித்தால், அதன் பிறகு முடிகள் கம்பிபோல் திக்காக வளர ஆரம்பித்துவிடும்.
அதுமட்டுமல்ல.. ஒரு தடவை த்ரெட்டிங் செய்தால், தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் புருவங்களில் இருக்கும் முடிகளுடைய வளர்ச்சி தாறுமாறாக மாறி, முக அழகையே கெடுத்துவிடும். மழிக்கப்பட்ட இடங்களில் முடிக்கால்கள் தோன்றி நம் முகத்தையே விகாரமாகக் காட்டி பயமுத்தும்.
புருவத்தில் முடி குறைவாகவும் மெல்லியதாகவும் இருந்தால், விளக்கெண்ணை வைத்து தினமும் இரண்டு வேளை நன்றாக புருவத்தை நீவி விடவும். இதன் மூலம் பலவீனமான புருவம் பலமான / அடர்த்தியான புருவமாக மாறிவிடும். அதன் பின் சீராக்கி வடிவமைத்தால், கண்களின் அழகையும் முக அழகையும் அது அதிகரிக்கும்.
இரவில், புருவத்தின் மேல் கோல்டு கிரீம் தடவிக் கொண்டு படுக்கவும். இது ஏ.சி. அறையில் இருப்பதால் ஏற்படும் வறட்சியைப்போக்கும். எந்த ஒரு காரணத்துக்காகவும் சருமம் வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பால், தயிர், மோர் போன்றவை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் சரி! ஆனா, த்ரெட்டிங் செய்யாமல இருக்க முடியலையே.! என்பவர்களுக்கு . இதோ சில டிப்ஸ்கள்!
* த்ரெட்டிங் போகும் முன்பாக கண்களைச் சுற்றி எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். பிறகு கழுவிவிட்டு, த்ரெட்டிங் செய்தால். புருவம் வில் போன்ற அழகான வடிவத்துக்கு மாறிவிடும். த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது தசையெல்லாம் சுருங்கக் கூடாது என்பதற்காக கண்களை கையால் அழுத்திக் கொண்டு தான் செய்வார்கள்.
முதன் முறையாக செய்து கொள்பவர்களுக்கு எரிச்சலுடன் வலியுடன் வீக்கமும் உண்டாகும். இந்த வீக்கம் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும். வீக்கத்தைப் போக்க, ஒரு நாள் வைட்டமின்-ஈ ஆயில், மறுநாள் பாதாம் ஆயில், இன்னொரு நாள் வெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆயில் க்ரீம் என மாறி மாறி பூசினால் வீக்கம் மறையும்.
அத்துடன், கண்களும் அழகாகத் தோற்றமளிக்கும். சில பெண்களுக்கு இரு புருவத்துக்கும் இடையே முடி சேர்ந்து கூட்டுப் புரவம் என்பதாக இருக்கும். பொட்டு வைத்தால் கூட அழகாகத் தெரியாது. இந்தக் கூட்டுப் புருவ முடிகளை அகற்ற.. கஸ்தூரி மஞ்சள் தூள், கிழங்கு மஞ்சள் தூள், கடலை மாவு ஆகியவற்றை தலா ஒரு டிஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள்.
இதை மூக்கின் நுனி பகுதியியல் இருந்து புருவம் வரை `திக்’காக பூசி, அரை மணி நேரம் கழித்து மெல்லிய காட்டன் துணியால் ஒற்றி எடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்து வரும்போது அந்த இடத்தில் முடிகள் உதிர்ந்து, முகம் பளிச்சிடும்.