கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும். கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும்.
பிறகு எடுத்து வடிகட்டி இத்தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் இளநரை மாறிவிடும். கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.
புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொண்டு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்தி கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால் இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.