தலைமுடியின் வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிக்க பல காலமாக தலையில் எண்ணெய் தடவும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
தலைமுடியின் வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிக்க பல காலமாக தலையில் எண்ணெய் தடவும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் பல்வேறு நன்மைகள் உண்டு. அவற்றுள் சில,
ஆயுர்வேதம்
ஆயுர்வேதத்தின்படி தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதால் உண்டாகும் பலன்கள் ஏராளமாக உண்டு. தலைமுடி அடர்த்தியாக, மென்மையாக பளபளப்பாக வளர உதவுகிறது. உணர்வு உறுப்புகளை மிருதுவாக்கி, அதன் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. முகத்தில் தோன்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.
ஆயில் மசாஜ்
தலை மசாஜிற்கு, ப்ரிங்கராஜ் எண்ணெய், பிராமி எண்ணெய், மற்றும் ஆரோக்கிய தலை முடி எண்ணெய் போன்றவை நல்ல பலன்களைத் தருகிறது.
உச்சந்தலையில் மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களைப் பெற, அதனைச் சரியான முறையில் சரியான நேரத்தில் செய்ய வேண்டும். நீங்கள் அடைய விரும்பும் பலன்களுக்கு ஏற்ற விதத்தில் தலை முடியில் எண்ணெய் தடவும் முறை மாறுபடுகிறது. தலை முடியில் எண்ணெய் தடவும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.
உறுதியான தலைமுடிக்கு
முடி வளர்ச்சி, குறைந்த நுனி முடி வெடிப்புகள், மென்மையான மற்றும் பளபளப்பான கூந்தல், இளநரை போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது, போன்ற அறிகுறிகள், உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்துகிறது.
எண்ணெய் தேய்த்தல்
இரவு உறங்கச் செல்வதற்கு முன் தலை முழுவதும் எண்ணெய் மசாஜ் செய்து கொள்வது சிறந்த பலன்களை தரும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. மசாஜ் செய்தவுடன், இரவு முழுதும் அப்படியே விட்டு விட்டு, பின் மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
தலைக்குளியல்
தலைக்கு குளிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும்போது தலையில் எண்ணெய் வைத்துவிட்டு பிறகு குளிக்கலாம். தினமும் தலைக்கு குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக நீண்ட கூந்தல் உள்ளவர்கள், தினமும் தலைக்கு குளிக்க வேண்டாம். ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளிக்கலாம்.
எப்படி தேய்க்க வேண்டும்?
தலைக்கு குளித்து முடித்தவுடன் சிலர் தலையில் எண்ணெய் தடவி விடுகின்றனர். ஆனால் அது தவறான ஒரு செயலாகும்.
தலைக்கு குளித்தவுடன் எண்ணெய் தடவுவதால், தலையில் உள்ள எண்ணெய், மாசுபட்ட சுற்றுசூழலில் உள்ள அழுக்குகளை உறிஞ்சிக் கொள்கிறது, மேலும் சூரிய கதிர்களினால் உண்டாகும் தாக்கம் கூந்தலை சேதப்படுத்துகிறது. ஆனால், நீங்கள் வெயிலில் செல்லாமல், வீட்டிலேயே இருந்தால், உங்கள் கூந்தலின் வேர்கால்களில் மட்டும் எண்ணெய் தடவலாம்.
முடி வளர்ச்சிக்கு, உச்சந்தலை, வேர்க்கால்கள் மற்றும் முடியின் முழு நீளத்திற்கும் எண்ணெய் தடவ வேண்டும்.
எண்ணெய் தேய்ப்பதற்கு முன், அதனை சிறிதளவு சூடு செய்து பின் தடவலாம்.
எண்ணெய்யைச் சூடு செய்து தேய்ப்பதால், பித்த சமச்சீரின்மை, தலைவலி, உச்சைதலையில் தடிப்பு, போன்றவை ஏற்பட்டால், எண்ணெய்யை சூடு செய்வதை தவிர்க்கலாம்.
பொடுகைப் போக்க
தலை அரிப்பு அல்லது பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறவர்கள் தினமும் தொடர்ந்து தலையில் எண்ணெய் தடவி வருவதால் இந்த பிரச்சனை எளிதில் சீராகிறது. சிறந்த தீர்வுகளுக்கு, எண்ணெயுடன் வேப்பிலை அல்லது கசப்பு சுவை கொண்ட மூலிகைகளைச் சேர்த்து தடவி வரலாம். இந்த மூலிகை எண்ணெய்யை தலை முடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். பொதுவாகத் தலை குளிக்கும்போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்ல பலனைத் தரும்.
தலைவலியில் இருந்து நிவாரணம் பெற
தொடர்ச்சியாக தலைவலியால் அவதிப்படுகிறவர்கள், ஆயுர்வேத எண்ணெய்யைத் தேர்வு செய்யலாம் அல்லது ஆயுர்வேத மருத்துவரை அணுகலாம். மாலை 6 மணியளவில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் தலைவலி குறைகிறது. தலைவலி வாதத்துடன் தொடர்பு கொண்ட ஒரு வலியாகும். ஒரு நாளின் மாலைப் பொழுதின் இந்த நேரம், வாதத்திற்கான நேரமாகும். ஆகவே இந்த நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்ப்பதால், உங்கள் தலைவலி நிச்சயமாகக் குறையும் .
ஆழ்ந்த உறக்கத்திற்கு
இரவு உறங்கச் செல்வதற்கு முன் அரை மணிநேரம் மென்மையாக தலையை மசாஜ் செய்வதால் இரவில் சிறந்த உறக்கத்தைப் பெறலாம். இந்த மசாஜிற்கு நல்லெண்ணெய்யை பயன்படுத்துவதால் சிறந்த தீர்வுகள் கிடைக்கும். தலை வழுக்கை, இளநரை, தலைவலி போன்றவற்றை இல்லாமல் செய்ய ஆயர்வேதம் நல்லெண்ணெய்யை பரிந்துரைக்கிறது. கேரளாவில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையங்களும் நல்லெண்ணெய்யை பயன்படுத்தி பல சிகிச்சைகளைச் செய்து வருகின்றன.