தலைமுடி உதிர்வால் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தி. ஜப்பானில் உள்ள ஆய்வாளர்கள் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அது ஒரு நோயாளியின் சொந்த மயிர் செல்களை நேரடியாக அவர்களின் உச்சந்தலையில் இடமாற்றம் செய்வதன் மூலம், அது ஒரு புதிய முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. டோக்கியோ மெடிக்கல் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த சரும நிபுணர்களின் குழு தான் இந்த புதிய நுட்பத்தைக் கண்டறிந்தது.
33 மற்றும் 64 வயதிற்குட்பட்ட 50 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் மீது அவர்கள் இந்த புதிய நுட்பத்தை சோதித்தனர். இந்த சோதனையானது ஒரு வருட காலம் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு வருடத்தில் 8 சதவீதம் அதிக முடி வளர்ந்திருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் இந்த புதிய நுட்பம் முடி உதிர்தலுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
முடி உதிர்தலுக்கான காரணங்கள்
ஒருவருக்கு குறைவான அளவில் தலைமுடி உதிர்ந்தால், உதிர்ந்த முடி தானாகவே வளர்ந்துவிடும். ஆனால் கொத்து கொத்தாக முடி உதிர ஆரம்பித்தால், அது ஒரு தீவிரமான பிரச்சனையின் அறிகுறி. தலைமுடி உதிர்வதற்கு வயது ஒரு முக்கிய காரணம்.
உதாரணமாக, வயது அதிகரிக்கும் போது, தலை முடி உதிர்வால் வழுக்கை விழ ஆரம்பிக்கும். மேலும் மன அழுத்தம், புற்றுநோய் சிகிச்சைகளான ஹீமோதெரபி அல்லது ரேடியோதெரபி, எடை இழப்பு அல்லது இரும்புச்சத்து குறைபாடு போன்றவற்றாலும் முடி உதிரும். இருப்பினும் பெலும்பாலான தலைமுடி உதிர்தலானது தற்காலிகமானவை மற்றும் மீண்டும் வளரக்கூடியவை.
ஆகவே தலைமுடி அதிகம் உதிர்ந்தால், உதிர்ந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் வேகமாக முடியை வளரச் செய்யலாம். இப்போது உதிர்ந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டிவிட செய்ய வேண்டியவைகள் என்னவென்று காண்போம்.
வெங்காய சாறு
* உங்களால் வெங்காயத்தின் நாற்றத்தை சமாளிக்க முடியும் என்றால், இந்த வழியை முயற்சிப்பது நிச்சயம் நல்ல பலனைத் தரும்.
* வெங்காய சாறு கெராட்டின் வளர்ச்சி காரணியை மேம்படுத்தும் மற்றும் மயிர்கால்களில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடியின் வளர்ச்சியை மேம்படுத்தும்.
* அதற்கு வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி, குறைந்தது 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை நீரில் அலச வேண்டும்.
ஆயில் மசாஜ்
* தலைக்கு வாரந்தோறும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வதால், முடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
* கூடுதலாக, ஸ்கால்ப்பில் மசாஜ் செய்வதால், மன அழுத்தம் மற்றும் டென்சன் நீங்கி, மனம் புத்துணர்ச்சியுடன் ரிலாக்ஸாக இருக்கும்.
கற்றாழை
* கற்றாழை ஜெல் முடியின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, ஸ்கால்ப்பை ஆற்றவும், கண்டிஷனராகவும் செயல்படும்.
* அதோடு இது பொடுகு மற்றும் அதிகப்படியான எண்ணெயால் மயிர்கால்களில் ஏற்படும் அடைப்பைக் குறைக்க உதவும்.
* அதற்கு கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி ஊற வைத்துக் குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு சில முறை செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.
தேங்காய் எண்ணெய்
* தேங்காய் எண்ணெயில் ஃபேட்டி அமிலங்கள் உள்ளன. இது முடியினுள் ஊடுருவி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் முடியில் இருந்து புரோட்டீன் இழப்பதைக் குறைக்கும்.
* தேங்காய் எண்ணெயை ஸ்கால்ப் மற்றும் ஒட்டுமொத்த முடியிலும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து, பின் தலைமுடியை அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும்.
மீன் எண்ணெய்
* ஒமேகா-3 சப்ளிமெண்ட்டுகளை உட்கொள்வது, தலைமுடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். ஒமேகா கொழுப்பு அமிலங்கள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்தவை. இது தலைமுடியின் அடர்த்தியை மேம்படுத்த பெரிதும் உதவும்.
* எனவே உங்களுக்கு தலைமுடி அதிகம் உதிர்ந்தால், மீன் எண்ணெய் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளுங்கள். இதனால் சத்து குறைபாட்டினால் முடி உதிர்ந்திருந்தால், அப்பிரச்சனை நீங்கி முடி ஆரோக்கியமாக இருக்கும்.
எலுமிச்சை
* நற்பதமான எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சை எண்ணெய்யை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவுவதன் மூலம், தலைமுடி மற்றும் ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் முடியின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.
* அதற்கு எலுமிச்சை சாற்றில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.