ஏதோ ஒரு செருப்பு வாங்கினோமா… அதை பல வருடங்கள் போட்டு கிழித்து பின்னர் புது செருப்பு வாங்கிய காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது. தங்களது ஆடைகளுக்கும், சென்று வரும் இடங்களுக்கும் ஏற்ற வகை வகையான செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் நாகரீகக் காலம் இது.
ஆடையின் நிறத்திற்கேற்ற செருப்பு, அதிக உயரம் கொண்ட குதிக்கால் செருப்பு, கால்களை முழுவதும் மூடிக் கொள்ளும் கட் ஷ, மெல்லிய லேஸ்களைக் கொண்ட தளர்வான செருப்பு, பெரிய கற்கள் பதித்தவை, துணியால் அலங்கரிக்கப்பட்ட காலணிகள் என பலப் பல வகைகளில் காலணிகள் சந்தைகளில் குவிகின்றன.
ஒவ்வொன்றும் தரத்திற்கும், அழகுக்கும் ஏற்ற விலைகளில் கிடைக்கின்றன. குறைந்த விலையிலும் அழகான காலணிகளை வாங்கிச் செல்ல முடியும். பாதங்களின் அழகைக் கூட்டும் விதத்திலும் காலணிகள் கிடைக்கின்றன. இதிலும் மணப் பெண்களுக்கு என்று சில காலணிகள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன.
2000 ரூபாயில் இருந்து துவங்கும் இதன் விலைகள் எந்த இடத்திலும் நிற்பதில்லை. அதாவது திருமண ஆடையின் நிறத்தில், அதில் உள்ள வடிவமைப்புக்கு ஏற்ற வகையிலும், மணப்பெண் அணியும் நகைக்கு ஏற்ற வகையிலும் காலணிகள் தயாரிக்கப்படுகின்றன. விருந்து நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சிக்கு செல்வதென்றால் ஆடம்பரமான காலணிகளை அணிந்து கொண்டு அனைவரையும் அசத்தலாம்.
ஆனால் தினமும் அலுவலகத்திற்கு அணிந்து செல்வதற்கு இவை எல்லாம் சரிபட்டு வராது. மிகவும் நலினமாக, ஆனால் பார்ப்பதற்கே கொஞ்சம் விலை கூடுதல் போல என்று நினைக்க வைக்கும் வகையில் காலணிகள் வந்துள்ளன. சாதாரண தோற்றத்தில் நல்ல தரத்துடன் அணிவதற்கு சுகமானதாகவும் அலுவலக பயன்பாட்டிற்கு பல வகைகளில் காலணிகள் இடம்பிடித்துள்ளன.
சந்தையில் பல வகைகளில் காலணிகள் வந்தாலும் நமக்கென்று ஒரு தேர்வு உள்ளது. உங்களுக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்து அணியுங்கள். காலுக்கும், காசுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் உங்களது தேர்வு இருக்கட்டும்