புடவை வாங்குகிறார்களோ இல்லையோ கடைக்குச் சென்று பார்த்து விட்டுத் தான் வருவோமே என்கிற பெண்கள் தான் அதிகம். அந்த அளவுக்கு ஆடைகளின் அரசியாக சேலை விளங்குகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரலாற்றில் சேலை இடம் பெற்றிருந்தது.
சங்க காலத்துக்கு முன்பு தாழையையும், பூவையும் சேர்த்து உருவாக்கப்பட்ட தாழை ஆடைகளை பெண்கள் அணிந்து வந்தார்கள். உடைகளை கொடிகளாலும், நொச்சி இலைகளாலும் ஆக்கிக் கொண்டார்கள். விழாக் காலங்களில் நெய்தல் மலர்களால் தாழையுடை செய்தார்கள். இடுப்பிலும் மார்பிலும் மகளிர் தாழையுடை அணிந்தார்கள் என சங்ககால வாழ்வியல் கூறுகிறது. காலம் செல்ல செல்ல பருத்தி உடையும், பட்டு உடையும் அணிந்தார்கள்.
பருத்தி உடை முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது. பால் ஆவி போன்ற மெல்லிய துணிகளும், பாம்பு தோல் போன்ற அழகான துணிகளும், காகிதம் போன்ற மெல்லிய துணிகளும், சாக்கு போன்ற முரட்டுத் துணிகளும் நெய்யப்பட்டன. இங்கிருந்து “மாதூரம்” எனப் பெயர் பெற்ற புடவைகள் காசி, பாடலிபுரம் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது என்று 3-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ரோம் முதலிய நாடுகளுக்கும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
அன்று நெசவு செய்பவர்கள் “காருகர்” என்று அழைக்கப்பட்டனர். வடகம், பாடகம், கோங்கலம், சித்திர கம்பி, பேடகம் எனப் பல பெயர்களில் ஆடைகளை சூடி மகிழ்ந்தனர். பருத்தியும், பட்டும் கொண்ட துணிகள் “துகில்” எனப்பட்டன. பருத்திப் புடவைகளுக்கு “கலிங்கம்” எனப் பெயர். பட்டு ஆடைகள் “நூலாக் கலிங்கம்” எனப்பட்டது. நெய்வதில் தேர்ந்த தமிழன், அதற்கு சாயம் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினான். மலர்கள், செடிகொடிகள், இலைகள் ஆகியவற்றின் சாறுகளில் வண்ணமேற்றினான்.
அவுரி செடியில் இருந்து ஏற்கப்பட்ட சாயம் ஐரோப்பியர்களின் மனதைக் கவர்ந்தது. இதில் இருந்து கிடைத்த நீல நிறச் சாயத்தை இண்டிகோ என்று அழைத்தனர். கடுக்காய், கொன்றைப் பூ போன்றவையும் சாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.
நாகரீகம் வளர வளர துணிகளின் ரகங்களும் வண்ணங்களும் மேலும் சிறப்படைந்தன. அதாவது உடல், பார்டர், முந்தி என மூன்று பகுதிகள் உள்ள புடவைகள். ஆட்டுமுழி, புளியங்கொட்டை, சொக்கட்டான், வைரஊசி, பாய் பின்னல் மற்றும் மயில் கழுத்து, கிருஷ்ண மேகவர்ணம் போன்ற இரட்டைக் கலப்பு நிறங்கள் கொண்டதாக இருந்தது. இப்படியே புடவைகள் பலவிதத்தில் பரிணாம வளர்ச்சி கண்டன.