உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்காக, நடக்கும் சில ரசாயன மாற்றங்களால்
நிகழ்வதே துாக்கம். நம் தற்போதைய வாழ்க்கை முறையில், பலவற்றை நாம் இழந்துவிட்டோம். அப்படியெல்லாம் இல்லை என்று சொல்பவர்கள், ஒரே ஒரு விஷயத்தையாவது யோசித்து, பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.
நன்றாக துாங்குகிறீர்களா?
‘ஓ… நல்லா துாங்குகிறேனே…’ எனச் சொல்பவர்கள், மிக மிகக் குறைவு. பலரும், ‘நல்லாவே துாங்கலே…’ என்பவர். இன்னும் சிலரோ, ‘ம்ம்… ஏதோ துாங்கினேன்…’ என்பர்.மனிதனுக்கு மிக மிக முக்கியமான, அத்தியாவசிய, அன்றாட தேவைகளுள் ஒன்று, துாக்கம். உடல் செயல்பாடுகளில், இயல்பாக நடக்க வேண்டிய காரியம் இது; இயற்கை, நமக்குக் கொடுத்துள்ள மிக உயர்ந்த பரிசு.இயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்டத்தில், துாங்குவதற்கு அதிக நேரம் செலவழிக்க முடியாது என்று கூறுபவர்கள் கவனிக்கவும். தினம், ஆறு மணி நேரத்திற்கு குறைவாக துாங்கினால், ஆயுள் குறையும் என, துாக்க ஆராய்ச்சிப் புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன.துாங்குவது, உடல் ஓய்வு பெறுவதற்காக தான் என்று எண்ணுவது, முழுமையான பதில் அல்ல; நம் மூளைக்கு ஓய்வு கிடைப்பதற்காக உள்ள ஏற்பாடு.
தொடர்ந்து, 18 மணி நேரம் துாங்காமலே இருந்து விட்டால், அவர்களுடைய உடல் உற்சாகமாக
இருந்தாலும், மூளை அது பாட்டிற்கு துாங்க துவங்கி விடும். அப்போது, ‘மெலோடோனின்’ என்கிற ஹார்மோன் சுரக்கிறது. தசைகள், எலும்புகள், வளர்ச்சி பெறுகின்றன.
மூளை செயல்பட தேவையான குளூக்கோஸ், நம் உடலின் பகுதிகளிலிருந்து தான் மூளைக்குச்
செல்கிறது. தொடர்ந்து துாங்கவில்லை என்றால், குளூக்கோஸை உபயோகிக்கும் திறனை மூளை இழந்து விடும். மூளை ஓய்வு எடுக்கும்போது, அப்படியே மூளை செயல்படாமல், மயங்கிக் கிடப்பதில்லை. அதன் செயல்பாட்டிற்குரிய சக்தியை தயாரித்துக் கொண்டிருக்கும்.
உறக்கத்திற்கும், நினைவாற்றலுக்கும் தொடர்பு உண்டு என்பதையும், ஆராய்ச்சியாளர்கள்
நிரூபித்துள்ளனர். தேவையான அளவு துாக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கு, திடீர் திடீரென கோபம் வரும்; எரிந்து விழுவர்; நினைவாற்றல் குறையும்; சோர்வு தோன்றும். உடம்பில் சக்தி இல்லாதது போன்ற நிலை ஏற்படும்.
துாக்கம் இல்லாத அளவுக்கு, வேலை பார்க்க வேண்டிய நிலை வரவே கூடாது. இரவு நேர வேலை செய்பவர்கள், கண்டிப்பாக, பகல் நேரத்தில் துாங்கி
ஓய்வெடுப்பது அவசியம்.நம் உடல், எல்லாவற்றிருக்கும், ஓர் ஒழுங்கு முறையை விரும்புவதால், துாக்கத்திற்கு அதுவே பொருந்தும். குறிப்பிட்ட நேரத்தில் படுத்து, குறிப்பிட்ட நேரத்தில் விழிக்க வேண்டும். சனிக்கிழமை அதிக நேரம் விழித்திருப்பதையும், ஞாயிறு அதிக நேரம் துாங்குவதையும் கூட தவிர்க்க வேண்டும். மாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டால், நல்ல துாக்கம் வரும். இடது
பக்கமாக கைகளை வைத்து, ஒருக்களித்து படுத்து உறங்குவது நல்லது. செரிமானம் தடைபடாது.
பகல் துாக்கத்தை தவிர்க்க வேண்டும். துாங்க நேரிட்டால், ஒரு மணி நேரம், அதுவும்
பிற்பகல், 3:00 மணிக்கு முன்பு துாங்கி எழ வேண்டும். இரவில் படுத்து, அரை மணி நேரம் துாக்கம் வராவிட்டால், புத்தகம் படிப்பது, சின்ன வேலைகள் ஏதாவது செய்தாலே, கண்கள் இழுக்க ஆரம்பித்து விடும்.துாக்க மாத்திரைகளை போட்டால் தான்
துாக்கமே வரும் என்ற நிலைக்கு போய்விடக் கூடாது. யாருக்குத் தான் கவலைகளும், கஷ்டங்களும், மனபளுவும், மன இறுக்கமும் இல்லை! இவற்றையெல்லாம், ஒரு மூட்டையில் கட்டி மூலையில் போட்டு விட்டு, துாங்க பழகி கொள்ள வேண்டும்.
இந்தியாவில், துாக்கமின்மையால் அவதிப்படும் ஆண்கள், 4.3 சதவீதம் என்றால் பெண்கள், 6.5 சதவீதம் உடலின் உயிரியல் கடிகாரத்தின் முட்கள் முறையாகச் சுழல்வதால் தான், உடலின் அனைத்து பாகங்களும், தங்கள் செயல்பாடுகளை சரியாக செய்கின்றன.
நன்றாகத் துாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், என்ன பலன்?
நல்ல துாக்கம் தேகத்திற்கு நல்ல பொலிவையும், அழகையும், மாசுவருவற்ற தோலையும், பிரகாசமான கண்களையும், வசீகரமான தலைமுடியையும்,
எடுப்பான, கவர்ச்சியான முகத்தையும் அளிக்கவல்லது.
ஆழ்ந்த துாக்கம், ‘பிட்யூட்டரி’ சுரப்பியை நல்ல வகையில் துாண்டுவதாகவும், குறைந்த துாக்கம் உடல் இயக்க சக்தியைக் குறைத்து, உடல் எடையை
கூட்டுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அழகு நிலையங்களுக்கு சென்று, நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கத் தேவையில்லை. உடல்நலம், உள்ள நலம் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஆரோக்கியத்தின் அடிப்படையான இவ்விரண்டையும் நல்ல வண்ணம் பாதுகாத்து தருவது ஆழ்ந்த அமைதியான துாக்கமே.
இந்த அற்புத எளிமையான இயற்கை தந்த பரிசை பெற்றவர்கள், உண்மையில் கொடுத்து வைத்தவர்களே!