ld1451
சரும பராமரிப்பு

அடுப்பங்கரையில் ஒளிந்திருக்கு அழகு!

‘உங்க கலர் மற்றும் அழகோட ரகசியம் என்ன?’
ரசிகை ஒருவரின் இந்தக் கேள்விக்கு, பிரபல நிறுவனத்தின் அழகுத் தயாரிப்பையோ, நட்சத்திர பார்லரின் காஸ்ட்லி சிகிச்சையையோ பதிலாகச் சொல்லவில்லை அந்த நடிகை. ‘ஷூட்டிங் இல்லாதப்ப கடலை மாவும் தயிரும் குழைச்சு முகத்துல போடுவேன். கேட்கறதுக்கு சிம்பிளா தெரிஞ்சாலும், ரொம்ப எஃபெக்டிவா இருக்கும்!’- அழகு ரகசியம் சொன்ன அந்த நடிகை தமன்னா!

உண்மைதான்… நாகரிக வளர்ச்சியில் நாம் ஒதுக்கித் தள்ளிய பல விஷயங்களில், அந்தக் காலத்து அழகு ரகசியங்களும் அடக்கம்! மஞ்சளும் சந்தனமும் பாட்டி காலத்தோடு பரணுக்குப் போக, அடுத்த தலைமுறை அம்மாக்கள் கூட ஃபேர்னஸ் கிரீமுக்கும் ஹேர் கலர்களுக்கும் மாறிவிட்டனர் இன்று.

விளைவு..? முப்பது பிளஸ்ஸிலேயே முதுமை எட்டிப் பார்க்கிறது. பாட்டிகளுக்கும் அத்தைகளுக்கும் அறுபதில் கூட நரைக்காத கூந்தல், இந்தக் காலத்துப் பெண்களுக்கு இருபதிலேயே இம்சை தருகிறது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அறிமுகமாகும் அழகு சாதனங்கள் எல்லாம் அழகுக்கு உத்தரவாதம் தருகின்றனவோ இல்லையோ, அலர்ஜியை உண்டாக்கி, இருக்கிற கொஞ்ச நஞ்ச அழகையும் காணாமல் போகச் செய்யத் தவறுவதில்லை.

சரி… என்னதான் தீர்வு?
”உங்கள் வீட்டு அடுப்பங்கரையை விட அசத்தலான, பாதுகாப்பான அழகு நிலையம் வேறு இல்லை” என்கிறார் அழகுக்கலை ஆலோசகரும், அழகு சாதனத் தயாரிப்பாளருமான ராஜம் முரளி. இவர் சொல்கிற குறிப்புகளும் ஆலோசனைகளும் – சமையலையும் அழகுப் பராமரிப்பையும் ஒரே நேரத்தில் கவனித்துக் கொள்ளும்படி சுலபமானவை… செலவில்லாதவை. முக்கியமாக பக்க விளைவுகளின்றி, நிரந்தர அழகு தருபவை!

”அரிசியும் பருப்பும் இல்லாம நமக்கெல்லாம் சமையல் முழுமையடையறதில்லை. அதே அரிசிக்கும் பருப்புக்கும் அழகோடவும் தொடர்புண்டு. அந்தக் காலத்தில் சாதம் வடித்த அரிசிக் கஞ்சியைத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பார்கள். அது கூந்தலை கண்டிஷன் செய்து, மிருதுவாக்கும்.

இன்று பிரஷர் குக்கரிலும் ரைஸ் குக்கரிலும் கஞ்சிக்கு எங்கே போவது?

1 டீஸ்பூன் அரிசியுடன், 2 டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துத் தலைக்கு பேக் மாதிரி போட்டு, சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். இதையே அரிசிக்கு பதிலாக துவரம் பருப்பையும் வெந்தயத்தையும் சம அளவு எடுத்து முதல் நாள் இரவே ஊற வைத்து, அடுத்த நாள் அரைத்து, பேக் மாதிரிப் போட்டு, ஊறிக் குளிக்கலாம். இப்படிச் செய்தால் அலசுவது சிரமம் என நினைப்பவர்கள், அரைத்த கலவையை வடிகட்டி, ஷாம்பு மாதிரியோ, அந்தத் தண்ணீரில் துணியை முக்கித் தலையில் கட்டிக் கொண்டிருந்தோ குளிக்கலாம். முடி உதிர்வை சரியாக்கி, நீளமாகவும் வளரச் செய்யும் இந்த சிகிச்சை.

பருவ வயதினரைப் பாடாகப்படுத்தும் மாபெரும் பிரச்னை பரு. அஞ்சறைப்பெட்டியில் இதற்கும் உண்டு மருந்து. அரை டீஸ்பூன் அரிசியுடன், 6 மிளகு சேர்த்து நைசாக அரைத்து, பருக்களின் மீது கெட்டியாக வைத்துக் காய்ந்ததும் கழுவவும்.

ரசத்துக்கோ, சாம்பாருக்கோ தக்காளி எடுக்கிறீர்கள் இல்லையா? அதில் கொஞ்சம் தக்காளியை அரைத்து (தோலுடன்) மூக்கின் மேல் தடவிக் காய விடவும். இது கரும்புள்ளிகளையும் வெள்ளைப் புள்ளிகளையும் நீக்கும். முடிந்தால் கூடவே ஆவியும் பிடிக்கவும். இது அந்தப் புள்ளிகளை தாமாக விழச் செய்யும்.

கேரட்டையோ, பீட்ரூட்டையோ ஒரு துண்டு எடுத்து அரைக்கவும். அந்தச் சாற்றை உதடுகளின் மேல் தடவி வந்தால், லிப்ஸ்டிக் போடாமலேயே சிவப்பாகும்.

பால் குடித்தால் கால்சியம் சேரும் என்பது தெரியும். அதே பால் சருமப் பளபளப்புக்கும் நல்லது. 1 டீஸ்பூன் பாலில், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால், சருமம் பளபளக்கும். மஞ்சள், மிகச் சிறந்த கிருமி நாசினியாக வேலை செய்யும். வெயிலினால் உண்டான கருமையைப் போக்க வல்லது பால்.

பாலுக்குக் கொஞ்சமும் சளைத்ததில்லை தயிர். தயிரில் உள்ள ஈஸ்ட், சருமப் பளபளப்புக்கு உதவும். கூந்தலுக்கும் நல்லது செய்யும். அரை கப் கடலை மாவில், புளித்த தயிர் சிறிது சேர்த்து, தலை முதல் பாதம் வரை தடவித் தேய்த்துக் குளித்தால் கூந்தலும், சருமமும் சுத்தமாகும். எண்ணெய் பசை சருமம் என்றால், கடலை மாவும், வறண்ட சருமம் என்றால் பயத்த மாவும் உபயோகிக்கலாம்.

பொன்னாங்கண்ணிக்கீரை சமைக்கும் போதெல்லாம், அதிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்துத் தனியே வையுங்கள். ஒரு கப் கீரையை நன்கு சுத்தப்படுத்தி, அரைத்து சாறு எடுக்கவும். அதே அளவு நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். பொன்னாங்கண்ணிக் கீரை சாற்றை அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். கொதித்து, ஓசை அடங்கியதும், அதில் நல்லெண்ணெய் விட்டு, தீயைக் குறைத்து வைத்து, சிறிது நேரம் கழித்து அணைக்கவும். இந்த எண்ணெயை கண் இமைகள், புருவங்கள், தலைமுடியில் தடவி வந்தால் கருகருவென அடர்த்தியாக, அழகாக வளரும்.

தினமும் சமையலுக்குக் கறிவேப்பிலையை உபயோகிக்கிறோம். சாப்பிடும்போதோ அதை ஒதுக்கி வைக்கிறோம். கறிவேப்பிலையை அரைத்து, சாறெடுத்து, கடலை மாவில் கரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை எட்டிப் பார்க்காது. கூந்தல் செழித்து வளரும்.
அதே போல 200 மி.லி. தண்ணீரைக் கொதிக்க வைத்து, கைப்பிடி கறிவேப்பிலை போட்டு மூடி வைக்கவும். ஆறியதும் அந்தத் தண்ணீரைக் குடித்தால்,
உடலிலுள்ள நச்சு நீர் வெளியேறி விடும். ஊளைச்சதை குறைந்து, உடல் சிக்கென மாறும்.

ஒருவரின் அழகைப் பிரதிபலிப்பதில் கண்களுக்குப் பெரும்பங்குண்டு. அழகான கண்கள் பேசும், சிரிக்கும். ஒரு துண்டு வாழைப்பழத்தை பால் விட்டு மசித்து, கண்களைச் சுற்றித் தடவி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை சாறெடுத்து, பஞ்சில் நனைத்துக் குளிர வைத்து, கண்களின் மேல் வைப்பதும், கருவளையங்களைப் போக்கி, களைப்பை
நீக்கும்.

எப்பேர்பட்ட பேரழகியையும் தர்ம சங்கடத்தில் தள்ளும் விஷயம் பிரசவத் தழும்புகள். கர்ப்பமாக இருக்கும்போதே, இதைத் தவிர்க்க மெனக்கெட வேண்டும். எலுமிச்சைச்சாறு, தேன் மற்றும் மஞ்சள் தூள் கலந்து வயிற்றுப்பகுதியில் மிதமாகத் தேய்த்து வந்தால் பிரசவத்துக்குப் பிறகான நிறமாற்றத்தைத் தவிர்க்கலாம்.

பூஜைக்கோ, உங்களுக்கோ பூ வாங்குவீர்கள்தானே… ரோஜா, மல்லிகை, மரிக்கொழுந்து, தவனம், செண்பகப்பூ, சம்பங்கி… இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதில் சிறிதை எடுத்து, கொதிக்கிற தண்ணீரில் போட்டு, மூடி வைக்கவும். ஆறியதும் அந்தத் தண்ணீரைக் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், மன அழுத்தம் நீங்கி, மனது அமைதியாகும்.

சிறிது தேங்காய் எண்ணெயில் மேலே சொன்ன பூக்களைப் போட்டு, கூடவே கொஞ்சம் வெட்டிவேரும் சேர்த்து குறைந்த தணலில் காய்ச்சி, 2 நாள்கள் அப்படியே வைக்கவும். பிறகு வடிகட்டி, உடல் முழுக்கத் தேய்த்துக் குளித்தால், வியர்வை நாற்றம் நீங்கி, உடல் இயற்கையான நறுமணம் பெறும்.

தாளிப்புக்குச் சேர்க்கிற கடுகு, சமையலுக்கு ருசி சேர்ப்பது போல, அழகுக்கும் உத்தரவாதம் தரக்கூடியது. 1 டீஸ்பூன் கடுகை நைசாக அரைத்து, பாதங்களில் தடவி, நன்றாகத் தேய்த்துக் கழுவினால், பாதங்கள் பட்டு போல மாறும். இதே கடுகு விழுதுடன், சிறிது வெண்ணெய் சேர்த்து, கால் நகங்களின் மேல் தடவிக் கழுவினால், நகங்கள் பளிச்சென்றும், பளபளப்பாகவும் மாறும்.
ld1451

Related posts

அன்றாட வாழ்க்கையில், அழகு… ஆரோக்கியம்!

nathan

இரவில் ஆலிவ் எண்ணெய்யில் மசாஜ் செய்யுங்கள்! சருமம் ஜொலிக்கும்

nathan

சில டிப்ஸ்!!! கழுத்து, முகத்தில் மருவா… எளிதாக அகற்ற….

nathan

உங்கள் சருமத்தை பாதிக்கும் மோசமான அழகுப் பொருட்கள்

nathan

கற்றாழையுடன் எதை சேர்த்தால் அட்டகாசமான சருமப் பொலிவை தரும்?

nathan

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்

nathan

வீட்டிலேயே புத்துணர்ச்சி தரும் ஸ்பா வேண்டுமா? இதோ இயற்கையான மூலிகை குளியல்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அக்குள் பகுதி கருப்பாக இருப்பதற்கு நீங்க செய்யும் இந்த தவறுகள்தான் காரணமாம்…!

nathan

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்!!

nathan