ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தும் அறிகுறிகள்

ஓய்வில்லாமல் மணிக்கணக்கில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கை எட்டும் வரை ஓய்வெடுக்காமல் தங்கள் உழைப்பை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். பணி நேரத்தை தவிர்த்துவிட்டு கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும் சிந்தனை முழுவதும் பார்க்கும் வேலை மீதே இருந்து கொண்டிருக்கும்.

இலக்கை எட்டிய பிறகும் முழுமையாக ஓய்வெடுக்க மனம் ஒப்புக்கொள்ளாது. ஓய்விலும் பணி பற்றிய சிந்தனை தொடர்ந்து கொண்டிருக்கும். அடுத்த வேலையை இன்னும் சிறப்பாக எப்படி செய்து முடிக்கலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள். ஆனால் மீண்டும் செயல்பட தொடங்குவதற்கு முன்பு உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். ஓய்வை விரும்பாமல் வேலையில் மூழ்கிக்கொண்டிருந்தால் உடலும், மனதும் உங்களை அறியாமலேயே ஓய்வுக்கு தயாராகிவிடும். ஒருசில அறிகுறிகளை கொண்டே ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கொள்ளலாம்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] கவனக்குறைவு: நிறைய பேர் நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவுக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுத்துவிடுவார்கள். அதே உத்வேகத்தில் அடுத்த பணிக்கு ஆயத்தமாவார்கள். ஆனால் அவர்களை அறியாமலேயே திடீரென்று கவனக்குறைவு எட்டிப்பார்க்கும். செய்யும் வேலையில் தவறுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். பணிச்சுமை அதிகரிப்பால் வேலையும், வாழ்க்கையும் சம நிலையில் இல்லாததே அதற்கு காரணமாகும். நன்றாக ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வேலையை தொடங்குவது சிறப்பாக செயல்பட தூண்டும்.

அதிகரிக்கும் புகார்: தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்கும் வரை சிலருடைய கவனம் வேறு எங்கும் திசை திரும்பாது. மற்றவர்களை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். தங்கள் வேலை முடிவடைந்துவிட்டால் உற்சாகமடைந்துவிடுவார்கள். அதன் பிறகு தங்களுடன் வேலை பார்க்கும் சக நண்பர்களின் வேலை மீது ஆர்வமும், கவனமும் கொள்வார்கள். அடுத்த வேலையை தொடங்கினாலும் முன்பு போல் வேலையில் ஆர்வம் இருக்காது. அவர்கள் மீது நிறைய புகார்களும் எழும். திடீரென்று எதிர்மறையான நபராக மாறிவிடுவார்கள். தங்களின் வேலை முடிந்ததும் கவனத்தை திசை திருப்புவதுதான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் நன்றாக ஓய்வு எடுத்துவிட்டு மனதை மீண்டும் வேலை பற்றிய சிந்தனையில் புகுத்திவிட்டு, அடுத்தகட்ட பணிகளுக்கு செல்ல வேண்டும்.

எப்போதும் பணி சிந்தனை: காலையில் எழுவது, வேலைக்கு கிளம்புவது, அலுவலகம் சென்றதும் வேலையில் மூழ்கிவிடுவது, வேலை நேரம் முடிந்ததும் நேராக வீடு திரும்புவது, தூங்குவது, மீண்டும் எழுந்து வேலைக்கு கிளம்பி செல்வது இதுதான் அன்றாட செயல்பாடாக நிறைய பேருக்கு இருக்கிறது. மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு நேரம் ஒதுக்கமாட்டார்கள். குடும்பத்தினருடனும் நேரத்தை செலவிடமாட்டார்கள். வேலைக்கு மத்தியில் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதற்கான ஓய்வு நேரத்தை உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் உடலும், மனமும் சோர்ந்துபோய்விடும்.

நோய் பாதிப்பு: நன்றாக வேலை பார்த்து அலுவலகத்தில் சிறந்த ஊழியர் என்று பெயர் எடுத்திருப்பார்கள். அதனை தக்கவைத்துக்கொள்வதற்காக ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருப்பார்கள். உடல் நலனையும், மன நலனையும் கருத்தில் கொள்ளமாட்டார்கள். உடலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. அது தொடர்ந்தால் நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். அடிக்கடி நோய் பாதிப்புக்குள்ளாகி மாத்திரை சாப்பிட நேர்ந்தால் அதற்கு பதிலாக ஓய்வெடுங்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றத்தை உணரலாம்.

மனக்குழப்பம்: இரவும், பகலும் அயராது உழைக்கும்போது உடலும், மனமும் தளர்வடையும். வேலையில் கவனம் குறைந்து மன குழப்பம் எட்டிப்பார்க்கும். முன்பை போல் வேலையில் போதிய கவனம் செலுத்த முடியாவிட்டால் அதிகப்படியான உழைப்பு அதற்கு காரணமாக இருக்கலாம். பார்க்கும் வேலையில் சுறுசுறுப்பையும், விரை வாக செய்து முடிக்கும் திறனையும் தக்கவைப்பதற்கு ஓய்வு அவசியம். சிறிது நேரம் இடை வெளி எடுத்துவிட்டு வேலையில் கவனம் பதித்தால் உற்சாகம் எட்டிப்பார்ப்பதை உணரமுடியும்.

வலிகள்: கடினமான உடல் உழைப்பு கொண்ட வேலைகளை தொடர்ந்து செய்யும்போது உடல் ஒத்துக்கொள்ளாது. வலி, வீக்கம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். கடினமான வேலையை செய்து முடித்த பிறகு கை, கழுத்து, உடல் பகுதிகளில் வலி ஏற்படுவது பொதுவானது. ஓய்வுதான் அதற்கு சிறந்த மருந்து.

மந்த உணர்வு: வேலை செய்யும்போது மந்தமான உணர்வு எட்டிப்பார்த்தால் தொடர்ந்து வேலையில் போதிய கவனம் செலுத்த முடியாது. கூடுதல் நேரம் வேலை செய்த பின்பு உடலுக்கு தேவையான ஓய்வு கொடுக்காவிட்டால் மந்த உணர்வை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாதது. ஓய்வு எடுப்பது வேலையை ஒருபோதும் பாதிக்காது. ஓய்வை அலட்சியப்படுத்தினால் அது நிச்சயமாக உடல் ஆரோக்கியத்தை நாளுக்கு நாள் மோசமாக்கும். எந்த வேலையாக இருந்தாலும் கவன சிதறலுக்கு இடம் கொடுக்காமல் செய்து முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தால் புத்துணர்ச்சியுடன் வேலையை தொடர்ந்து செய்து முடிக்கலாம்.

Courtesy: MalaiMalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button