Courtesy: Maalai Malar
ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் இரண்டாம் இடம் எனும் குடும்ப ஸ்தானத்தின் மூலம் ஏழாமிடம் ஆணின் ஜாதகமாயின் மனைவியைப் பற்றியும் பெண்கள் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும் அறியலாம்.
அதாவது வாழ்க்கை துணையால் பெறும் இன்பம் எத்தகையது? அவர் நல்லவரா? பண்புள்ளவரா? படித்தவரா? நடைபெறும் திருமணம் மன மகிழ்வைத் தருமா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற அமைப்பு உள்ளவரா? தம்பதிகள் கடைசி வரை சேர்ந்து வாழ்வார்களா? என்பது போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.
ஜென்ம லக்ன அடிப்படையில் இருதார அமைப்புகள் ரிஷபம், மிதுனம், கடகம், துலாம், மீனம் ஆகிய 5 லக்னத்திற்கு இயல்பாகவே இருப்பதால் இரு தார யோகம் உண்டு.
ரிஷபம் : கால புருஷ குடும்ப ஸ்தானம் மற்றும் சுக்ரனின் ஆட்சி வீடு ரிஷபத்தில் உச்சம் பெறும். ராகு ஏழாம் இடமான விருச்சிகத்தில் நீசம் பெறும். விருச்சிகம் கால புருஷ ஸ்தானத்தில் எட்டாம் இடம். எட்டாம் இடம் மறைவு ஸ்தானம் என்பதால் வெளியுலகத்திற்கு தெரிவிக்க முடியாத மறைவு வாழ்க்கை நிச்சயம் உண்டு.
மிதுனம் : இந்த லக்னம் கால புருஷ ஸ்தானத்தில் மூன்றாம் இடம் என்பதால் அடிக்கடி வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். லக்னாதிபதி புதன் இரட்டைத் தன்மை நிறைந்த கிரகம். புதனும், சுக்ரனும் நட்பு கிரகம். மேலும் சுக்ரன் மிதுனத்திற்கு 5, 12-ம் அதிபதி என்பதால் தக்க நேரத்தில் துணையாக இருந்து இரண்டு தார யோகத்தை செய்து காட்டுவார். இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கும் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கும் புதன், சுக்கிரன் சம்பந்தம் இருந்தால் இரண்டு திருமணம் உண்டு.
கடகம் : கடக லக்னத்தினருக்கு சுக்ரன் 11-ம் அதிபதி. சுக்ரன் ஆட்சி, உச்சம் சுயசாரம் பெற்றால் இருதார யோகம் உண்டாகும்.
துலாம் : கால புருஷ ஸ்தானம் ஏழாம் இடம். இதன் அதிபதி சுக்ரன். சுக்ரனும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் சனி தசை சுக்ர புத்தி அல்லது சுக்ர தசை, சனி புத்தியால் இரண்டாம் திருமணம் நடக்கிறது.
மீனம் : இயல்பாகவே இரட்டை தன்மை நிறைந்த லக்னம். மீனத்தில் சுக்ரன் உச்சம் பெறும்போதுஏழாம் வீடான கன்னியில் சுக்ரன் நீசம்பெறும் என்பதால் அழகான பெண் அல்லது வெகுளியான பெண்களின் அன்புக்கு அடிமையாகி தனக்காக ஒரு வாழ்க்கையும் ஊருக்காக ஒரு வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.
பொதுவாக எந்த தசை நடந்தாலும் தசைஅல்லது புத்தி நாதனுக்கு சுக்கிரன், ராகு அல்லது சனி, சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்டு.